search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யு டர்ன் விமர்சனம்"

    பவன்குமார் இயக்கத்தில் சமந்தா - ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன், பூமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `யு டர்ன்' படத்தின் விமர்சனம். #UTurnReview #Samantha
    இன்ஜினியரிங் முடித்துவிட்டு பிரபல பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்கிறார் சமந்தா. தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலையில், வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகிறார். வேளச்சேரி மேம்பாலத்தில் சாலையை கடக்கக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை நகர்த்திவிட்டு சாலையை கடப்பவர்களை தேர்வு செய்து அவர்களை பேட்டி எடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதற்காக சாலை விதிகளை மீறுபவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார்.

    ஒருநாள் தனது லிஸ்டில் இருக்கும் பெயர்களில் ஒன்றை தேர்வு செய்து, அவரை பேட்டி காண செல்கிறார். ஆனால் குறிப்பிட்ட அந்த நபரை சந்திக்க முடியாமல் திரும்பி விடுகிறார். இந்த நிலையில், சமந்தா பேட்டி காண சென்ற நபர், மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். அதில் மரணத்தில் சமந்தாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் போலீசார் சமந்தாவை கைது செய்கின்றனர்.

    இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான ஆதி, சமந்தாவிடம் கொலை பற்றி விசாரிக்க தான் அந்த கொலையை செய்யவில்லை என்றும், கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறுகிறார். ஆனால் சமந்தா சென்ற நேரத்தில் தான் கொலை நடந்ததாக போலீசார் கூற, தான் ஒரு பத்திரிகை நிருபர் என்பதையும், அங்கு சென்றதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.



    சமந்தாவின் பேச்சில் உண்மை இருப்பதாக உணரும் ஆதி, சமந்தாவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடிவு செய்கிறார். அதேநேரத்தில் சமந்தாவிடம் உள்ள அனைவரின் தகவல்களையும் வாங்கி தனது விசாரணையை தொடங்குகிறார். அதில் சமந்தா சேகரித்த பட்டியலில் உள்ள அனைவருமே இறந்து விடுகின்றனர். 

    இந்த மரணங்களில் இருக்கும் ஆதியும், அந்தமும் புரியாமல் தவிக்கும் ஆதி இந்த மரணங்களுக்கான காரணங்களை கண்டுபிடித்தாரா? சமந்தாவின் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் இறக்க காரணம் என்ன? சமந்தா இந்த வழக்கில் இருந்து எப்படி தப்பித்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஒரு இளம் பத்திரிகை நிருபராக, என்னவென்றே புரியாத ஒரு வழக்கில் சிக்கித் தவித்தும், அதை சமாளிக்க போராடும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பு அபாரமாக இருக்கிறது, பாராட்டுக்களை வாங்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியான ஆதி திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்த தவறவில்லை. அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கிய அங்கமாக பயணிக்கிறது. எப்போதுமே வித்தியாசமாக கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்கும் நரேனின் கதாபாத்திரம் படத்திற்கு அச்சாணியாக விளங்குகிறது. பூமிகா இந்த படத்தில் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று, அதை சிறப்பாகவே நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 



    சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனின் கதாபாத்திரமும் ரசிக்கும்படியாகவே வந்துள்ளது. மற்றபடி ஆடுகளம் நரேன், ரவி பிரகாஷ், கீதா ரவிசங்கர் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் விறுவிறுப்புக்கு துணையாக இருந்துள்ளனர்.

    கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற யு டர்ன் படத்தின் ரீமேக் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலுவான அச்சாணியை போட்டியிருக்கிறார் இயக்குநர் பவண் குமார். படம் ஆரம்பிக்கும் நிமிடம் முதல் இறுதி வரை படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு செல்வதே இயக்குநரின் பலம். அடுத்ததடுத்த காட்சிகள் வேககமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்வது ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கிறது. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

    அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வியின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `யு டர்ன்' விறுவிறுப்பு. #UTurnReview #Samantha #Aadhi

    ×